logo

The Institute of Mathematical Sciences

தாவரங்களை ஆழமாக நேசிப்பவர்


ஜனவரி 22, 2025 | பாரதி தாராபுரம் மற்றும் மணிகண்டன் சாம்பசிவம்

Read in English

“இருபத்தி ஏழு வருடமாக நான் தோட்ட வேலையில் ஈடுபட்டு இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு வரைக்கும்தான் நான் படித்தேன், எனக்கு தெரிந்தவையெல்லாம் அனுபவத்தின் மூலம் கற்றதுதான்.” என்று சொல்கிறார் ஆர். மகேந்திரேன் அவர்கள். நம்முடைய வளாகத்திலுள்ள அனைத்து தாவரங்களையும் அவுருடைய குழுவுடன் இணைந்து பராமரித்து பார்த்துக்கொள்கிறார். தஞ்சாவூர் அருகிலுள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் வாழ்வாதாரம் தேடி சென்னை வந்துள்ளார்.

“1998ல் சென்னை வந்தபோது எனக்கு தோட்டவேலை என்பது மிகவும் புதிது.” ஒரு பணக்கார வியாபாரியின் பங்களாவில் வேலை செய்தபோது அவர் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். “ஒரு நாள், ஒருவர் செடி வெட்டிக்கொண்டு இருந்தபோது என்ன செய்றீங்கனு என்று கேட்டேன். அவரு பழைய ஆளு நான் புதுசு.” என்று நினைவுகூருகிறார். அதற்கு அவர், “நீ ஏன் கேக்குற” என்று எதுவும் சொல்லித்தரவில்லை. மகேந்திரன் அவரின் பின்னால் சென்று, அவர் செடி வெட்டுவதையும் மற்ற செயல்களையும் கவனித்து அவற்றிலிருந்து கற்றுக்கொண்டார். “செடியை செங்குத்தாக நடக்கூடாது. இந்தக் கணுவிலதான் வேர் பிடிக்கும் தண்டின் அடியில் பிடிக்காது.” கையில் உள்ள ஒரு செடித்தண்டைக் குறித்துக்காட்டி விளக்குகிறார். “தண்ணீர் நிறைய இருந்தது என்றால் அழுகிவிடும். ஏன் என்றால் ஆக்சிஜன் போகாது. அதே மாதிரி நடும் பகுதியில் தண்டு உரிந்துவிட்டது என்றாலும் வளராது” என்கிறார்.

“இந்த விஷயத்தை நான் மறந்ததே இல்லை.” கற்றல் என்பது உற்றுகவனிப்பதாலும் செய்து பார்ப்பதினாலும் நிகழும் என்பதை உள்வாங்கியிருக்கிறார். “நான் இவ்வாறுதான் கற்றேன். யாரும் எனக்கு கற்றுத்தரவில்லை.”

ஒரு சிறு நாற்றுப்பண்ணையில் மகேந்திரன் பல்வேறு நாற்றுகளையும் வெட்டியெடுத்த தண்டுகளையும் வளர்த்தெடுக்கிறார்.
“12 ஆண்டுகளாக ஐஐடி மெட்ராஸில் பணியாளராக வேலைசெய்த பின்னர், IMScல் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேற்பார்வையாளராக இருக்கிறேன்.” என்கிறார் மகேந்திரன். வாகன நெரிசல் அதிகரிக்கும் முன்னரும் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்படும் முன்னரும், கோட்டூர்புரத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் காலையில் சீக்கிரமே வந்துவிடுகிறார். விதைகளை நடுவது, தண்டெத்து வைப்பது, மரங்கள் மற்றும் செடிகளைச் சீர் செய்வது மற்றும் புல்வெளிகளை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவர் மேற்பார்வையிட்டு பார்த்துக்கொள்கிறார். “மற்ற தோட்டக்காரர்களுடன், எல்லா வேலைகளிலும் நானும் ஈடுபட முயற்சி செய்வேன் அப்போதுதான் அவர்களும் ஆர்வத்துடன் வேலையைச் செய்வார்கள்” என்கிறார். இவர்கள் பிரதான கட்டிடத்தின் நடைப்பாதைகளில் தொட்டிச்செடிகளை வைத்து பராமரிக்கிரார்கள். முக்கிய நிகழ்வுகளின்போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. “சூரிய வெளிச்சம் தேவை என்பதால், வாரத்திற்கு இரண்டு முறையாவது தொட்டிச்செடிகளை வெளியே வைக்கிறோம். பின்னர் அவற்றை மீண்டும் உள்ளே எடுத்துவந்துவிடுவோம். இதைச் செய்யாவிட்டால், இரண்டு வாரங்களுக்குள் செடிகள் வாடிவிடும், மூன்று வாரங்களுக்கு மேல் இலைகள் உதிரத் தொடங்கிவிடும்.” என்கிறார். “ஒரு செடியை தொட்டியில் வைத்துவிட்டால் மட்டுமே வேலைமுடிந்துவிடாது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை மண்ணை மாற்ற வேண்டும் அல்லது மண்ணில் உரம் சேர்க்க வேண்டும்.”

மகேந்திரனுடைய வேலை மாலை 4:30 மணியளவில் முடிவடைகிறது. வெளிச்சம் குறைவதற்கு முன்பு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பிவிடுகிறார். “எனக்கு 69 வயது ஆகிவிட்டது, இருட்டில் கண்கள் சோர்வடைந்துவிடுகின்றன.”

விடுதியின் அருகில் சில தோட்ட ஊழியர்கள் புல்வெளி அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மழைக்காலங்கள் மகேந்திரனின் குழுவுக்கு மிகவும் சவாலானதாக இருக்கக்கூடும். வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும். “மழைக்காலத்தில் ஏராளமான தாவரங்கள் அழிந்துவிடும். கடந்த ஆண்டு [2023], பெரும் வெள்ளம் ஏற்பட்டதால் பல தாவரங்கள் இறந்துவிட்டன. இத்தகைய கனமழைக்குப் பிறகு மீண்டும் வேலைகளைத் தொடங்குவது கடினம், ஆனால் நாங்கள் உடனடியாக நிலைமையை சரிசெய்ய முயற்சி செய்வோம்” என்கிறார். COVID-19 பெருந்தொற்றின் போது போடப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பெரும் சவால்களைத் தந்தன. “கோவிட் காலத்தில் நிறுவனத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. என்னையும் வர வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். தாவரங்களுக்கு வாயா இருக்கிறது, அவற்றின் கஷ்டத்தை சொல்ல?” என்கிறார். “நான் மட்டும் இங்கேயே இருந்தேன். மற்றவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். தாவரங்கள் எனக்கு குழந்தைகளைப் போன்றவை, அவை மடிவதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க இயலாது.” கேண்டீன் அருகில் உள்ள நீலக் கொட்டகைதான் அவரின் அறை. அதன் வெளியிலேயே அவருடைய சிறிய நாற்றுப்பண்ணை உள்ளது. அவருடைய அறையில்தான், கோவிட் காலத்தில் வருகை தந்த சிலருக்கு மகேந்திரன் தேநீர் மற்றும் கஷாயம் தயாரித்துக் கொடுத்தார்.

நாற்றுப்பண்ணையை ஆசையாக எனக்கும் என்னுடன் வந்திருந்த மணிகண்டனுக்கும் அவர் சுற்றிக் காட்டினார். சுமார் பத்திற்கு மேற்பட்ட வெவ்வேறு தாவரங்களின் நாற்றுகளை அவர் அங்கு பராமரித்து பார்த்துக்கொள்கிறார்.

கோவிட்-19 ஊரடங்கின்போது வளாகத்தில் இருந்த ஒருசிலரில் மகேந்திரனும் ஒருவர். இது மகேந்திரனின் அறை. இங்கிருந்துதான் தாவரங்களை அவர் பராமரித்தார்.
“பல விதைகளை முளைக்கச் செய்து நாற்றுகளாக வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் இவற்றை நாம் நடப்போகிறோம் என்று முடிவு செய்தால் பயன்படும்” என்கிறார். சிங்கோனியம், பனைவகைகள், மணி ப்ளாண்ட், ஜாதி மல்லி, மா, பிரண்டை, வாழை மற்றும் நாகலிங்க மரம் ஆகியவற்றின் சில நாற்றுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். நாகலிங்க மரத்தை முளைக்கவைப்பது மிகவும் கடினம் என்கிறார். அருகிலுள்ள வளாக எல்லைச்சுவற்றைக் காண்பித்து அங்கு பகல் நேரத்தில் குரங்குகள் மற்றும் அணில்கள் சாப்பிட வரும் என்கிறார். அவற்றிற்கென தினமும் உணவெடுத்து வைக்கிறார். மைனாக்கள், குருவிகள், கொக்குகள் மற்றும் மரங்கொத்திகளும் வருகின்றன. மேலும் அவர் வெளியில் விட்டுச் செல்லும் தண்ணீரை கீரிப்பிள்ளைகள் வந்து குடிக்கும். “இது மலை வேம்பு” என்று கேண்டீன் வெளியே உள்ள ஒரு இள மரத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். “இது வளர அதிக சூரிய ஒளி தேவை. ஒரு பக்கமாக சாய்ந்திருந்தது, அதற்கு தாக்குக்கொடுத்த பிறகு இப்போது நன்றாக இருக்கிறது.” பின்னர் விருந்தினர் விடுதிக்கு அருகிலுள்ள தோட்டப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பூச்சிகளை ஈர்க்கும் பல தாவரங்களை அங்கு வைத்துள்ளனர். அந்த மதியவேளையில் பட்டாம்பூச்சிகள் இங்கும் அங்கும் மெருதுவாக பறக்கின்றன. இங்கு, பூச்சிகளை தடுக்க பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுவதில்லை என்கிறார். அவரின் அறையிலிருந்து கேண்டீன் பக்கத்தில் உள்ள ஒரு பாதையில் அடுத்து அழைத்துச் சென்றார். எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பெரிய அரசு மற்றும் அத்தி மரங்களைக் காட்டினார். “பறவைகள் விதைகளை சுவர்களில் போட்டுச்செல்வதால் செடிகள் அங்கும் வளர்கின்றன” கான்கிரீட்டிலிருந்து முளைக்கும் கெட்டியான தண்டுகளை சுட்டிக்காட்டினார்.

வளாகத்தில் பெரிய மரங்களை வளர்ப்பதில் அவருக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. தூங்குமூஞ்சி (அளவில் பெரியது என்றாலும் வலிமை குறைவான), அரசு, புளி, மா மற்றும் வேப்ப மரங்கள் சுவர்களுக்கு சேதம் விளைவித்து கட்டிடங்களில் கசிவுகளை ஏற்படுத்தலாம். அவரின் பேச்சில் கவலை தென்பட்டது. ஆனால், அவரை பொறுத்தவரையில் புங்கை மரம் பொருத்தமானது. “எல்லாவற்றுக்கும் அது நல்லது.”

கேண்டீன் அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு நெருக்கமாக வளரும் ஒரு அரச மரம்.
“எனக்கு அனைத்து தாவரங்களையும் பிடிக்கும். அவற்றை பராமரிப்பதற்கென உழைப்பது எனக்கு பிடிக்கும். ஒரு நாற்றை எங்கு நடவு செய்ய வேண்டும் என்பதை பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும். அது வளர எவ்வளவு காலம் வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் அது எவ்வாறு இருக்கும் என்பதையும் ஆழமாக சிந்திக்க வேண்டும். எதை செய்தால் சரியாக இருக்கும் என்று தொடர்ந்து யோசிப்பேன். யார் சொல்லுக்கும் காத்திருக்காமல் அதைச் செய்வேன்” என்கிறார். “எதை நடவு செய்தாலும் கண்டிப்பாக முளைக்கும் என்று முழுமையாக சொல்லிவிடமுயாது. நன்றாக வளரும் என்ற நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். அனைவராலும் நடவு செய்ய முடியாது, அனைவருக்கும் தோட்டக்கலை வராது. சிலருக்கு இயற்கையாகவே வரும், அதனுடன் அசையா நம்பிக்கையும் தேவை.” பின்னர், 13 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புகைப்படத்தை எங்களுக்குக் காட்டுகிறார். அதில், அவரும் அனைத்து தோட்ட ஊழியர்களும் வளாகத்தின் முன்வாயிலில் ஒன்றாக நிற்கின்றனர். மகேந்திரனின் முகம் மலர்கிறது அதை பார்க்கும்போது. IMScன் 50வது ஆண்டை நினைவுகூரும் வகையில் வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையில் மரங்களை அவர்கள் நடவு செய்தபோது எடுக்கப்பட்டது அந்த புகைப்படம்.“எனக்கென எந்த விருதுகளையும் நான் எதிர்பார்க்கவில்லை. தோட்ட பராமரிப்பிற்கு நிதி ஒதுக்கி எனக்கு பொறுப்பு தந்திருக்கும் நிறுவனத்திற்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.” என்று மன உறுதியுடன் கூறுகிறார். “இந்த வேலை எனக்கு பிடிக்கும் என்பதால் மட்டுமே கடந்த 15 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து செய்ய முடிந்திருக்கிறது.”

IMScன் 50 ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வின் போது மரங்கள் நடப்பட்டன. இதன்போது அனைத்து தோட்ட ஊழியர்களும் இணைந்து ஒரு குழு புகைப்படம் இது.
வெட்டியெடுத்து நடப்பட்ட ஒரு தண்டை பற்றி மகேந்திரன் ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டிருந்த போது, வெளியே காகம் கரைக்கும் சத்தம் கேட்டது. உரையாடலை அவர் விரைவாக நிறைவுசெய்தார். காகங்களுக்கு உணவு பரிமாறும் நேரம் இது.

Back Subscribe




Copyright © The Institute of Mathematical Sciences, Chennai